×

பியூசி தேர்வில் எனது மகள் தேர்ச்சி பெறாமல் போனதற்கு காங்கிரஸ் தலைவர்களே காரணம் : உமேஷ்ஜாதவ் குற்றச்சாட்டு

கலபுர்கி: இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எனது மகள் தேர்ச்சி பெறாமல் போனதற்கு எனக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் செய்துவரும் பொய் பிரசாரம் தான் காரணம் என்று கலபுர்கி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் உமேஷ்ஜாதவ் குற்றம்சாட்டினார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நான் அரசியல் வாழ்விலும் பொதுவாழ்விலும் இதுவரை தூய்மையை கடைபிடித்து வருகிறேன். என்மீது எந்த களங்கமும் வந்ததில்லை. இது கலபுர்கி மாவட்ட மக்களுக்கு தெரியும். நான் முறைப்படி மருத்துவ கல்லூரியில் படித்து டாக்டராக பணியாற்றினேன். சிஞ்சோளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த துணைமுதல்வர் பரமேஸ்வர், நான் நோயாளிகளுக்கு ஊசி போடும்போது மருந்துக்கு பதிலாக தண்ணீர் போட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார். இது டாக்டர் தொழிலை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் முதல்வர் பதவியை தவிர மாநிலத்தில் அனைத்து துறை அமைச்சராகவும், மத்தியில் அமைச்சராக மல்லிகார்ஜுன கார்கே இருந்துள்ளார்.

அவர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் சீனியார் தலைவர் என்ற இமேஜ் காரணமாக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற செய்து வருகிறார்கள். மக்களின் ஒத்துழைப்பால் வெற்றி பெற்று அதிகார சுகத்தை அனுபவித்துவரும் கார்கே, இது வரை ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளார். அவர் சேர்த்துள்ள சொத்துகள் தொடர்பான வழக்கு லோக்ஆயுக்தாவில் இருந்தும் அதை பகிரங்கப்படுத்தாமல் சில அரசியல் சக்திகள் தடுத்து வருகிறது. மாநிலத்தில் சமீபத்தில் இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் நன்றாக படித்து வந்த எனது மகள் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் இருந்த எனக்கு ரூ.50 கோடி கொடுத்து பாஜ தலைவர்கள் வாங்கி விட்டதாகவும், பணத்திற்காக நான் விலை போய்விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்துவருகிறார்கள். இது எனது மகளுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் ஏற்படுத்தியது.  என்மீதான புகார் தொடர்பாக என் மகளிடம் அவளது சக தோழிகள் கேட்ட போது உள்ளம் உடைந்துவிட்டார். இந்த கவலை காரணமாக அவரால் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : FEC ,Umesh Jadhav ,leaders ,Congress , Reason ,daughter's fail , PUC exam
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...